பூமியின் சுற்றுச்சூழலுக்கு மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மிகப் பெரிய சவாலாக உள்ள நிலையில், இந்திய அளவில் முதல்முறையாக மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கிராபீன் உருவாக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரமேஷ் சாதனை படைத்துள்ளார்.



நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் அதிகப்படியான பொருட்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக்கை பயன்படுத்திவிட்டு கழிவாக தூக்கி எறிந்து விடுகிறோம். அந்த பிளாஸ்டிக் கழிவுகள் மக்காமல் பூமியில் புதைந்து விடுகிறது. மக்காத இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனிடையே சுற்றுச்சூழலுக்கு சவாலான பிளாஸ்டிக் கழிவுகளை வளமாக மாற்றிடும் வகையில், அதிலிருந்து கிராபீன் உருவாக்கும் இயந்திரத்தை பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்டான்லி தினகரன், விஜயன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத் தலைவர் (பொறுப்பு) ராஜ், திட்ட இயக்குநர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறும் போது, இந்திய அளவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் வாயிலாக 15 விநாடிகளில், ஒரு கிராம் கிராபீன் உருவாக்க முடியும். தற்போது ஒரு கிராம் தயாரிக்கப்படும் நிலையில், விரைவில் ஒரு கிலோ தயாரிக்கும் வகையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நெகிழி குப்பைகளை பெரிய அளவில் குறைக்க முடியும் என்பதுடன் மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கு கிராபீன் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும் என்றார்.



இரும்பை விட 200 மடங்கு வலுவான கிராபீன் தற்போது ஒரு கிலோ ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்ச ரூபாய் வரை அதன் தரத்தை வைத்து விலை போகிறது. மதிப்புமிகுந்த கிராபீனை தற்போதுள்ளதை விட குறைந்த விலையில் நெகிழி கழிவுகளில் இருந்து உருவாக்கிடும் போது, வான்வெளி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் துறை மற்றும் கட்டுமானத்துறைகளில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். மேலும், காகிதத்தை போல மடித்து எடுத்து செல்லக்கூடிய தொலைக்காட்சி, ஒரு முறை கூட சார்ஜ் செய்யத் தேவையில்லாத செல்போன், கட்டுமானத்துறையில் சிமெண்ட் பயன்பாட்டை குறைத்து வலுவான கட்டமைப்புகள் உருவாக்கம் என தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இந்த கிராபீன் உதவும் என்றும் அவர் கூறினார்.