விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் இந்து முன்னணி மாநில அளவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.


விநாயகர் சதுர்த்தி விழா: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்


பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, "வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. இதேபோல் சிறிய விநாயகர் சிலைகள் 15 லட்சம் வீடுகளில் வைத்து வழிபட்டனர். இதுபோல இந்த ஆண்டும் இந்த எழுச்சி இருக்கும் என எண்ணுகிறோம் . 



மதம் மாற்ற தடை சட்டம்:


ஆந்திர முதலமைச்சர் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது. இருப்பினும் விழா எழுச்சியாக கொண்டாடப்படுகிறது. மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் விநாயகர் சிலைகள் 20 முதல் 30 அடி வரை வைத்து 15 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிலை வைக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மக்கள் சேர்ந்து மாற்றுவார்கள் என்றார். 



தமிழகத்தில் ஊடுருவல்:


தொடர்ந்து பேசிய அவர், பங்களாதேஷ் கலவரம் போல, நம் நாட்டிலும் சிலர் ஊடுருவி கலவரம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஊடுருவி உள்ளனர். இதனை உளவுத்துறை கண்டு கொள்ளவில்லை. இங்கு வேலை பார்ப்பவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களா, பங்களாதேஷை சேர்ந்தவர்களா என விசாரிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.


முத்தமிழ் முருகன் மாநாடு:


பழனியில் முத்தமிழ் முருகனுக்கு மாநாடு நடத்தியுள்ளனர். இது இந்துக்களுக்கு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என இந்த தமிழக அரசு புரிந்து கொண்டுள்ளது. இந்த முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவிற்காக முதல்வர் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. முதல்வர் பங்கேற்காதது இந்துக்களை ஏமாற்றுகின்ற வேலை, போலியான நாடகம் என்று குறிப்பிட்டார்.