சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் இன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமைகள் நடைபெற்ற கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், மாநகராட்சி உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி பேசும்போது, 15 வது நிதி குழுவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில் மார்ச் மாதத்திற்குள் மாநகராட்சியில் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய ஒதுக்கீடு பணம் இதுவரை வரவில்லை. மார்ச் மாதத்திற்கு உள்ளாக எப்படி நிதி ஒதுக்கி பணிகள் செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இவர்களை மேயர் ராமச்சந்திரன் அமைதிப்படுத்தினார்.



இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் எழுந்து, சில வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அதிமுக கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு நிதி அதிக ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்து பேசினார். இதற்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இனி உரிய நிதி ஒதுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் திமுக கவுன்சிலர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசும்போது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். மாமன்ற கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி நிதி கிடைக்கவில்லை. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளில் உள்ள இடையூறுகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கு தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 



பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையே கடந்த ஆட்சியில் இருந்தது. அரசு நிதி ஒதுக்கினாலும் கூட பல்வேறு காரணங்களால் பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. கடந்த கால நிதிநிலை பிரச்சினைகளை முதலமைச்சர் சீர் செய்து தற்போது நிதிநிலை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தெளிவான வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமையும். அனைத்து வார்டுகளிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும். மாநகராட்சி ஆணையாளர் அனைத்து வார்டுக்கும் சமமான நிதியை ஒதுக்கி தர வேண்டும். அந்த நிதியின் அடிப்படையில் வார்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாமன்ற உறுப்பினர்கள் செயல்பட முடியும். நிதி நிலையை பொறுத்தவரை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வளர்ச்சி உள்ளது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.