கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு வேலூர் சிறை டிஐஜி வீட்டு வேலைக்கு சென்றதாகவும், அங்கிருந்த ரூபாய். 4.25 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாகவும் கூறப்படுகிறது. விசாரணை நடத்தியபோது, மண்ணில் புதைத்து வைத்திருந்த பணத்தை கண்டு பிடித்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகுமாரின் தாய், தனது மகன் திருடிவிட்டான் என கூறி அவனை சித்ரவதை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதுதொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர், சிறையில் சென்று விசாரணை நடத்தினார். அதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அரசுக்கு வரும் 17 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 



இதையடுத்து சென்னை சிபிசிஐடி போலீசார், வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் சூப்பிரெண்ட் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன், பிஎஸ்ஓ ராஜூ, ஓசிடீமை சேர்ந்த ரசித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் போலீசார் சரஸ்வதி, செல்வி, வார்டன்கள் சுரேஷ், சேது என 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 14 பேரும் முதற்கட்டமாக துறைரீதியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், அவர்களில் சிலர் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையில் வேலூர் சிறையில் இருந்த கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ள கைதி சிவக்குமாரிடம் இன்று காலை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் சசிதர் மற்றும் சென்னிஸ், இளங்கோ, காவல் ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலம் முழுவதையும் வீடியோ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு முழு விசாரணை அறிக்கையை நீதிமன்ற விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.