சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள இடங்கணசாலை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற வாலிபர் தறித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியா இருவருக்கும் திருமணமாகி பத்து மாதங்கள் ஆன நிலையில், பிரியா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக சந்திரசேகரின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் வருத்தம் தாங்கமுடியாமல் சந்திரசேகர் மதுபோதைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். பின்னர் மது போதையின் உச்சமாக போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததால் போதைக்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி மற்றும் உறவினர்கள் சேலம் இடங்கணசாலை பகுதியில் உள்ள (பி.கே லைப்கேர் பவுண்டேஷன்) என்ற போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திரசேகரை சேர்த்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், நேற்று தகராறு செய்ததாக உறவினருக்கு போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தொடர்பு கொண்டு உள்ளனர். பின்னர் உறவினருக்கு தகவல் கொடுத்த போதை மறுவாழ்வு மையத்தை சேர்ந்த நிர்வாகிகள் சந்திரசேகருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து உடல் முழுவதும் பார்த்த போது ஆங்காங்கே காயங்கள் கடுமையாக இருந்துள்ளது. பின்னர் இதுதொடர்பாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டபோது தகராறு செய்ததால் இரண்டு கைகள், கால்களை பின்பக்கமாக இறுக்கி கட்டியதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுதொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சந்திரசேகரை அடித்துக்கொலை செய்துவிட்டதாகவும், இறப்பில் மர்மம் இருப்பதால் முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில் கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதும், பின்னர் கயிற்றை கழட்டும் காட்சி, வாகனத்தில் ஏற்றி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் கை கால்களை கட்டி போட்டது ஏன் என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மையத்தின் நிர்வாகி ஒருவர், கை கால்களை மட்டுமே கட்டிப்போடுவோம் என்று பேசும் காட்சி வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த வாலிபரின் மனைவி பிரியா கூறுகையில், இரண்டு கைகள் மற்றும் கால்களை பின்புறமாக இறுக்கி கட்டி வைத்துள்ளனர். 4 மணி நேரத்திற்கு எதுவும் பார்க்காததால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறிப்பாக கை, கால்களை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். உடல் முழுவதும் காயங்கள் இருக்கிறது. தனது கணவரை போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள நிர்வாகிகள் அடித்து கொலை செய்துவிட்டார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.