வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வெல்ல ஆலைகள் மீது உணவு பாதுகாப்புத்துறை குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை.

Continues below advertisement

சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. வெல்லம் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளை கொண்டும், வெள்ளை சர்க்கரையும் சேர்த்து வெல்லம் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.

Continues below advertisement

இதையடுத்து தாரமங்கலம், ஓமலூர், காமலாபுரம், காட்டூர், எல்லப்பள்ளி, பொட்டியாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், வெல்லத்தில் கலப்படமாக சேர்க்க வைத்திருந்த 6,350 கிலோ சர்க்கரையும், செயற்கை நிறமூட்டி 3,100 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலப்பட வெல்லம் தயாரித்த 7 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் நடத்திய சோதனையில், வெல்ல ஆலைகளில் இருந்து 15,800 கிலோ சர்க்கரையும், 3,320 கிலோ செயற்கை நிறமூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "வெல்ல ஆலைகளில் கலப்பட வெல்லம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டிகளில் வரும் வெல்லங்களில் உணவு மாதிரி சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. கலப்பட வெல்லம் தயாரித்த 22 ஆலைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 250 ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. வெல்லம் தயாரிப்பில் சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வெல்ல ஆலைகள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெல்லம் தயாரிக்க கூடிய ஆலைகள் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola