சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில். சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர்கள் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.



அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட மிகவும் முக்கியமான தேர்தல். மக்களுடைய நேரடி தொடர்புடையது என்றார். பாமக மக்களின் முன்னேற்றத்திற்கு தேவைப்படும் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் எனவே பாமகவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பாமகவினர் மேயர் ஆனால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான். இதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்களை தேடி வருகிறார். அரை நூற்றாண்டு திமுக, அதிமுக ஆட்சி செய்துள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை. மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றார்.


சேலம் மாநகரில் உள்ள உயர் மட்ட பாலங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாலம் இடிக்கும் சூழல் வரும். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் திட்டமிடுதல் கிடையாது. மக்களுக்கு தேவையானதை செய்ய மாட்டார்கள். சாலை அமைத்தால் கமிஷன் வரும் அது மட்டும் தான் திமுக, அதிமுக 2 கட்சிகளுக்கு தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நேரடியாக ஒவ்வொரு ஊர்களாக, கிராமங்களாக வந்து மக்களை சந்திக்க வருவேன். பாமகவிற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறோம்.



மேட்டூர் உபரிநீரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதியில் உள்ள ஏரிக்கு மட்டும் எடுத்து சென்றுவிட்டார். மற்ற ஏரிகளுக்கு செல்லவில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டம் நான் முதல்வராக இருந்திருந்தால் 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிருப்பேன் என்று கூறினார்.


நீர் மேலாண்மை பற்றி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தெரியாது. நான் பேசிய பின்னர் தான் அவர்கள் பேசினார்கள். நீட் தேர்வு கொண்டு வந்தது குறித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து விவாதம் நடத்தலாம் என்று முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோர் மாறி மாறி பேசி வருகிறார்கள். நானும் இந்த விவாததிற்கு வருகிறேன். நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து தேர்தல் முடிந்த பிறகு மேடை அமைத்து விளக்கமாக பேசிகிறேன். நீட் தேர்வை திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் தான் கொண்டு வந்தது என்று கூறினார்.