சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட மல்லூர், பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, பேளூர், வாழப்பாடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை நேரில் சந்தித்தார். பின்னர் வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்து முதல்வரின் சாதனைகளை திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு ஓய்வு இன்றி தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அங்கிருந்து புறப்பட்ட போது அங்கு திங்கட்கிழமை நடைபெற்று வந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதை கண்டு திடீர் என்று சந்தை பகுதிக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு காய்கறி கடை வைத்து இருந்த விவசாயிகள் மற்றும் சந்தைக்கு பொருள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடமும் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
மேலும் சந்தைக்கு வந்து இருந்த பெண்களிடம், திமுக அரசின் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், சுய உதவி கடன் தள்ளுபடி ஆகியவற்றை எடுத்துக் கூறி அந்த பகுதி திமுக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, தங்களின் பெயரை வைத்து தேர்தல் பொதுக்கூட்டங்களில் விமர்சனம் செய்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே கடந்த 13 வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாத போது கலைஞரும், அதே போல கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சியினர் யாரையும் தனிநபர் விமர்சனம் செய்ததில்லை. ஆனால் பத்து வருடம் ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஆட்சியில் இல்லாமல் ஆறு மாதம் கூட தாங்க முடியாமல் பதவி வெறிக்காக ஏதேதோ பேசி வருகிறார்.
பதவி இல்லாமல் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் செய்ய முடியாதவை பதவியேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்த முதல்வர் தற்போது குடும்ப மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பக்கம் திரும்பி விட்டனர். அதுபோல அதிமுகவிற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை எனவே இன்னும் பத்தாண்டு காலத்திற்கு ஸ்டாலின் தான் நீடிப்பார் என்றார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்து 90% வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள். சேலம் மாநகராட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று அமைச்சர் நேரு கூறினார்.