தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் சிறப்பாக பணியாற்றிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். 



பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தில் பெண்கள் பேருந்துகளில் செல்ல தமிழக முதலமைச்சர் புதிதாக திட்டத்தினை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் பெண்கள் பயனடைந்து உள்ளனர் என்றார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் செல்ல போதிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதா என்றும், மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா என்றும் அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தேன்.


கூடுதலாக கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதலாக வருவாய் கிடைக்க என்னென்ன செய்யலாம் என அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதை எடுத்து திரளான மாணவிகளும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.


இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேருந்து வசதிகாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு whatsapp குரூப் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 



மேலும் தமிழக அரசு போக்குவரத்து துறை புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வங்கியில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க அவ்வப்போது ஆய்வும் செய்து வருகிறோம். கூடுதலாக கட்டணம் வசூல் செய்த வர்களிடம் திரும்பப்பெற்று பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் மற்றும் திருவிழா காலங்களில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.


கடந்த ஒரு வருட காலத்தில் 132 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டு உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை யாரும் கோரிக்கை வைக்காத போது தமிழக முதலமைச்சர் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க உத்தரவிட்டார். சிறு வியாபாரிகள் மகளிர் வாழ்க்கை முன்னேற இந்த திட்டம் வழிவகுக்கும்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.