இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் வெப்பநிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஈரோட்டில் நேற்று முன்திரம் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இது இந்திய அளவில் மூன்றாம் இடம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதே போல் நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 108.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்திய அளவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் 110 டிகிரி ஃபாரன்ஹீட், ஒடிசாவில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்திய அளவில் சேலம் மாவட்டம் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக சேலத்தில் கடுமையான வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்தவகையில், கோடை காலங்களில் அவசிய காரணங்கள் தவிர வெளியில் வருவதைத் தவிர்த்தல் வேண்டும். கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். குறிப்பாக, கோடை காலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.


 


மேலும், சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம் உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம். மேலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும். கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும், முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.