சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முரளிதரன். இவர் பள்ளிக்கு வரும்போது வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு சென்று விடுவார் என்றும், அவரது வகுப்பை வேறொரு நபரை நியமித்து பாடம் எடுக்க செய்வார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் ஆசிரியர் முரளிதரனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சேலம் - ஏற்காடு பிரதான சாலையில், கொண்டப்பநாயக்கன்பட்டி சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் முரளிதரனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



இருப்பினும் ஆசிரியர் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி மாணவர்கள் கொண்டபநாயக்கன்பட்டி சந்தை பகுதியிலேயே திரண்டு இருந்தனர்.


இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் கூறுகையில், ஆசிரியர் முரளிதரன் இந்த பள்ளிக்காக பொதுமக்களை சந்தித்து பெரும் தொகையை ஈட்டி பள்ளிக்கு பல்வேறு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், தனது வருமானத்தில் பெரும் பகுதி பள்ளிக்காகவே செலவிட்டவர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியவர் என்றும் தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்த ஆசிரியரை முரளிதரன் தனக்கு மாற்றாக நியமித்துள்ளதாக எண்ணி முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாணவர்களிடம் அவர் மீதான குற்றச்சாட்டை சொல்லிக் கொடுத்து எழுதி வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.



இது குறித்து மாணவர்கள் கூறும்போது, ஆசிரியர் முரளிதரன் தங்களது பள்ளியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர் என்றும், அவரால்தான் தங்களது கல்வி மேம்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டதுடன், அவர் பள்ளிக்கு திரும்பும் வரை நாங்கள் தேர்வுக்கு வரமாட்டோம் என்று தெரிவித்தனர்.


இதனை அடுத்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.