சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருநர்களுக்கென தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் ஆண்கள், பெண்களுக்கென புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. எனினும், திருநர்களுக்கென தனியாக சிகிச்சைப் பிரிவுகள் காணப்படுவதில்லை. இந்நிலையில், உடல் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மூன்றாம் பாலினத்தினர் ஆண்கள் அல்லது பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவில் சென்று, தங்களுக்கான பிரச்சினைகளை கூறுவதும், அதற்கான சிகிச்சைகளை பெறுவதும் தயக்கமான சூழலை ஏற்படுத்தும். எனவே, மூன்றாம் பாலினத்தினர் நலன்கருதி, தற்போது அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்திருக்கான தனியாக சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு இன்று தொடங்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி சிறப்பு சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வள்ளி சத்தியமூர்த்தி, தமிழகத்தில் சென்னை, மதுரையில் உள்ள அரசு மருத்துவனையில் திருநர்களுக்கென தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநர்களுக்கான தனி புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கப்படவுள்ள புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும். இந்த சிகிச்சைப் பிரிவில் பொது மருத்துவர், சிறுநீரகவியல் துறை மருத்துவர், பிளாஸ்டிக் சர்ஜன், என்டோகிரைனாலாஜிஸ்ட் என நோயாளியின் சிகிச்சைத் தேவைக்கு ஏற்ப, மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். வருங்காலத்தில், மூன்றாம் பாலினத்திருக்கான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த திருநங்கைகள், தமிழகத்தில் மூன்றாம் இடமாக சென்னை, மதுரையைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் இன்று திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ பிரிவு துவங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னர் சிகிச்சை பெற வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்தது. அதற்கு மிகுந்த பணச்செலவு ஏற்படும் நிலையும் இருந்த நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் திருநருக்கான சிறப்பு பிரிவில் விரைவில் அறுவை சிகிச்சைகளும், ரோமங்கள் நீக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். தற்போது வாரத்தில் ஒரு நாள் மட்டும் செய்யப்படும் சிகிச்சை பிற்காலத்தில் தினசரி சிகிச்சையாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.