சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. நாள்தோறும் சுமார் 2000 க்கு மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர்கள் மூச்சுதிணறல் ஏற்பட்டு அலறி அடித்தபடி வெளியேறினர். 


Salem GH Fire Accident: சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; டாக்டர்களுக்கு மூச்சுத்திணறல் - காரணம் என்ன?


இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மாற்று இடத்திற்கும், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தூய்மை பணி செய்து வரும் ரஷ்யா என்ற பெண் மூச்சு திணறல் காரணமாக திடீர் மயக்கம் ஏற்பட்டு அருகில் இருந்த மற்றொரு அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு செய்த 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.



இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், “நோயாளிகள் பொதுமக்கள் எந்தவித பதட்டமும் அடைய தேவையில்லை, அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள சிகிச்சை பிரிவு மற்றும் தனியார் உட்பட பல்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு தளங்களிலும் எந்தவித மருத்துவ உபகரணங்களுக்கும் சேதம் அடையவில்லை” என்று தெரிவித்துள்ளார். மின் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி கூறுகையில், “விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. குறிப்பாக தீ தடுப்பு கருவிகள் கொண்டுதான், தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்த நிலையில் புகை மூட்டம் அதிகரித்து, தீ அதிகரித்ததால் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எந்தவித பாதிப்பும் இல்லாமல் நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மாற்று சிகிச்சை பிரிவுகளுக்கு மாற்றப்பட்டன. மின்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.