சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை அன்றாடம் அச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் ஏற்காட்டில் பல்வேறு சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோரிமேடு வழியாக சேலம் - ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. எனது சேலம் - ஏற்காடு பிரதான மலைப்பாதையை சீரமைக்கும் பணி 24.04.2023 முதல் 28.04.2023 வரை ஐந்து நாட்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் பணிகள் முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்க படாது எனவும், சேலம் குப்பனூர் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் ஏற்காட்டிற்கு செல்லவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சேலத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் 2 வது கொண்டை ஊசிவளைவை ரூபாய் 71.90 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கொண்டை ஊசி வளைவு 17 மீட்டர் உயரம் மற்றும் 30 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இதில் 22 அடுக்குகளாக பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. பத்து நாட்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரு வார காலத்திற்குள் இரு முறை கனமழை பெய்ததால், பணிகளை முடிக்க சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும். சீரமைப்பு பணிகள் நடப்பதால், பாதுகாப்பு கருதி சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக, தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்களு டன் ஒருங்கிணைந்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்தானது இன்று (6ம் தேதி) முதல், சேலம் - கோரிமேடு வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டும் வந்து செல்ல அனுமதிக்கப்படும். வரும் 10 ஆம் தேதி சீரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெறும். எனவே, 11 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பனூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்து பிரேக் பழுதால் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்காட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தகுதி இல்லாத வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாது. டூவீலரில் வருவோர் தலைக்கவசமும், காரில் வருவோர் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும். மலை பாதையில் கீழே இறங்கும் போது நியூட்ரல் கியரில் இறங்காமல், முதல் கியர் அல்லது 2வது கியரில் வாகனத்தை இயக்க வேண்டும். குறிப்பாக, கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தை இயக்கும் போது 10 கி.மீ வேகத்திலேயே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.