சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் கடந்த 23 ஆம் தேதி ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் காயமடைந்த முருகன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கடந்த 25 ஆம் 90% காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் கருங்கல்பட்டி பகுதியில் நெருக்கமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் கோபி என்பவரது வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், கோபியின் தாயார் ராஜலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், அருகில் இருந்த வீடும், மேல் தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. கட்டடத்தின் பாகங்கள் வெடித்து சிதரியதில் பால் வியாபாரி ஒருவரும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இடிபாடுகளில் சிக்கிய சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , வெங்கடராஜன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜா ஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மேலும், தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, ராஜலட்சுமி, 90 வயது மூதாட்டி மற்றும் பூஜா ஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில். முருகன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது சேலம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், 11 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.