உலகில் நாகரிகம் வளர்ந்து வருவதோடு, மனிதர்களின் வாழ்வு முறையும் அதற்கு ஏற்றாற்போல மாறி வருகிறது. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுபடை ராமசாமி. அவருக்கு வயது 77. கடந்த 64 ஆண்டுகளாக இரவில் குறிசொல்லும் குடுகுடுப்பைக்காராக இருந்து வருகிறார். இவர் கொல்லிமலையில் உள்ள குரு என்பவரிடம் முறையான பயிற்சி பெற்று சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, குகை, செவ்வாய்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அக்கரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குறி கூறி வருகிறார்.
மூன்று தலைமுறை குலத் தொழிலாக குறி கூறிவரும் இவர்கள், தற்போது மற்ற குடுகுடுப்பைக்காரர் போல இல்லாமல் உடுக்கை சத்தம் மற்றும் குறி கூற தான் வந்துள்ளதை ஒலிபெருக்கி மூலம் பதிவு செய்து, அதனைக்கொண்டு தொழிலை நடத்தி வருகிறார். நீண்ட தாடி, தலப்பா, விரல்களில் மோதிரம், கழுத்தில் ருத்ராட்ச கொட்டை, கையில் ஒலிபெருக்கி என வித்தியாசமான தோற்றத்தில் தெருக்களில் நடந்து வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இவரை பயத்துடன் பார்க்கின்றனர்.
இதுகுறித்து குடுகுடுப்பைக்காரர் ஆறுபடை ராமசாமி கூறுகையில், தன்னுடைய 13 வயதிலிருந்து கொல்லிமலை குருவிடம் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு குறி கூறி வருவதாக தெரிவித்தார். மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது அவர்கள் குலத் தொழிலான குறி சொல்வதை விட்டுவிட்டு சில்வர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒலிபெருக்கி வைத்து குறி கூற அழைப்பதால் வந்தவுடன் சத்தம் கேட்டு அனைத்து வீடுகளிலும் இருந்து குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் தன்னைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். சேலம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் ஆறுபடை ராமசாமி என்று எனது பெயர் சொன்னாலே அனைவரும் நன்கு அறிவார்கள். தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் நான் மக்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது இல்லை. எனது தந்தை மற்றும் தாத்தாவிடம் செய்துகொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு உண்மையாகவும், நியாயமாகவும் மட்டுமே குறி கூறி வருகிறேன் என்று கூறினார். பிறரைப் போல மக்களிடம் காணிக்கையாக இவ்வளவு தரவேண்டும் என்று கூறமாட்டேன். பொதுமக்கள் நான் கூறும் குறியினை அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து, நான் கூறுவதற்கு ஏற்றார்போல காணிக்கை செலுத்துவார்கள் என்றார். மேலும் நாகரீகத்திற்கு ஏற்றார் போல நாமும் மாறிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நவீன இயந்திரத்தை கொண்டு இவ்வாறு தொழிலை நடத்தி வருகிறேன் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்