தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்குவதற்கு மக்கள் பல இடங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.


இனிப்பு மற்றும் காரம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணங்கள் குறித்து தெளிவாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விளக்கினார். அவர்களிடையே உரையாற்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரம் உணவுப் பொருட்களில் கலப்படங்கள் ஏதும் இல்லாமல் அரசு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் முழுமையாக மூடப்பட்ட பெட்டிகளில் வைக்கப்படும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இனிப்பு கடைகளில் வழங்கப்படும் பதிவு சான்றிதழ் கட்டாயம் கடையின் ஒரு பகுதியில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இனிப்பு கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தலைக்கவசம், முக கவசம் மற்றும் கையுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் கூறுகையில்,  தீபாவளி பண்டிகையை ஒட்டி சேலத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிப்ட் பாக்ஸ்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் கட்டாயம் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய இடங்களில் இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது தரமானதாக தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக லேபிள் ஒட்டி விற்க வேண்டும் என்று தெரிவித்தவர், லைசன்ஸ் இல்லாமல் பொருட்களை தயாரிக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 



மேலும், ”சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் இனிப்பு மற்றும் கார வகைகளில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமிகளை சரியான அளவு சேர்க்க வேண்டும் அதிகம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலப்படத்துடன் வந்த 12 அரை டன் சோம்பு பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதை பரிசோதிக்க சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வு முடிவு வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் உணவு தரத்தை கண்காணிக்க சேலத்தில் 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தரமற்ற இனிப்பு வகைகளை தயாரிப்போர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.