சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து வந்த ஐந்து காதல் ஜோடிகளால் காவல் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ராக்கிபட்டி காலனியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் தேசிய மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் ஜனார்த்தனனும், சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி பகுதியை சேர்ந்த பெரிய சாமி மகள் உமா மகேஸ்வரியும், சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 



வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதேபோல சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா நகரை சேர்ந்த சௌந்தர் மகன் மேகவாசனும், ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகள் ரம்யாபிரபாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதேபோல ஓமலூர் அருகே உள்ள மஞ்சுளாயூர் பகுதியை சேர்ந்த மணியும், கருப்பூர் தட்டாஞ்சாவடியை சேர்ந்த உதயதனுஷாவும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டனர். அதேபோல சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தியும், அதே பகுதியை சேர்ந்த கிருபாவும், கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். 



அதேபோல ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியை சேர்ந்த சில்லி சிக்கன் கடை நடத்தும் பூவரசனும், மல்ல கவுண்டனூரை சேர்ந்த அனிதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இவர்களும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், இன்று இந்த ஐந்து ஜோடிகளும் அடுத்தடுத்து பாதுகாப்பு கேட்டு, ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து ஓமலூர் காவல்துறையினர் ஐந்து காதல் ஜோடிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்து, காதல் ஜோடிகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கோபத்துடன் காவல் நிலையம் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்த சம்பவத்தினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், இன்று காலை முதல் ஓமலூர் காவல் நிலையம் திருமண மண்டபம் போல காட்சியளித்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண