சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும் மணி மற்றும் ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார். மேலும் திமுக ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்தி திணிப்பால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர் திமுக கட்சி அலுவலகத்தில் இன்று 11 மணி அளவில் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டு அதே இடத்தில் உயிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு , இந்தி எழுத்து மாணவ, மாணவிகள் வாழ்க்கை பாதிக்கும் இந்தி ஒழிக இந்தி ஒழிக என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் சி.வி.கணேசன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உயிரிழந்த திமுக நிர்வாகி தங்கவேல் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)