நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இது சேலம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி என்ற பிரிவின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம் என்பவர் கட்சியில் இருந்து விலகினார். இதேபோல், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் உட்பட 40 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து கோவை நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக அக்கச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.  அதன்பின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்குவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் முன்னாள் மாவட்ட செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகியுள்ளனர்.


தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வந்த நிலையில், தற்போது சேலம் வடக்கு மாவட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் பால்ராஜ் அசோகன் உட்பட 30 நிர்வாகிகள் நாதகவில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிந்தும் விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "நாம் தமிழர் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் ஆகிய நான் மற்றும் என்னோடு பயணித்த 30 உறவுகளும் இன்று முதல் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிந்தும் விலகிக் கொள்கிறோம். இதுநாள் வரை ஒத்துழைப்பு நல்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் தலைவர் வழியிலும் கட்சியில் இருந்து விலகிய மாநகர மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம் அவர்களுடைய தமிழ்தேசிய வழியிலும் எங்கள் பயணம் தொடரும்" என பதவித்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பல நாதக நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருவது சேலம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.