வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆறு பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் கருக்கல்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா, சித்ரா, மானு, விஜயா, மீனா, வெண்ணிலா ஆகியோர் குடும்பத்துடன் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது வளாகம் முன்பு, அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை அனைவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர்.

 

Continues below advertisement

இந்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சண்முகப்பிரியா கூறியதாவது, “நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். தறி தொழில்தான் எங்கள் தொழில் நாங்கள் செல்வதற்கு வழித்தடம் இருந்தது. ஆனால், அருகே வசிக்கும் ஊர் கவுண்டர் குடும்பத்தினர் அந்த வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி செய்கின்றனர். இதனால் நாங்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வழித்தடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.  இதனால் வெளியே செல்ல முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பெரியவர்கள் எங்கும் வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் வழித்தடமாக இருக்கக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து எதற்காக வீடு கட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசி அப்படித்தான் செய்வோம் என்றும் கொலை மிரட்டல் விடுகின்றனர்‌.

எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டல் விடுகின்றனர். தாரமங்கலம் போலீசில் புகார் அளித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழித்தடம் இல்லாததால் வீட்டிலேயே முடங்க வேண்டியுள்ளது‌. எங்களை வாழவும் விடாமல் கொலை மிரட்டல் இருப்பதால் சாவதை தவிர வேறு வழியில்லை என நினைத்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் டவுன் ஸ்டேஷன் அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.