“ஒட்டுமொத்த சமூகத்திற்கு தீங்கு என்று எனது பாடல்களை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாடகர் அசல் கோலார் கூறியுள்ளார்.

Continues below advertisement

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் திரைப்படப் பாடகர் அசல் கோலார் என்கிற வசந்தகுமார் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாடகர் அசல் கோலார் பாரதிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கினார். இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் பாடல்களை பாடியும், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். 

 

Continues below advertisement

ரூ.5 லட்சம் நன்கொடை

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசல் கோலார், "நீண்ட நாட்களாக பள்ளி மாணவர்களுக்காக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பர் மூலமாக இந்தப் பள்ளியின் தொடர்பு கிடைத்தது. நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன்தான். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என முடிவு செய்து இன்று சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளேன்.

கார்ப்பரேட்டால் இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்டுகள்

தற்போது, எனது தனிப்பட்ட பாடலில் கவனம் செலுத்தி வருகிறேன். அதன் பின்னர் படத்தின் பாடல்கள் வாய்ப்பு கிடைக்கும்போது பணியாற்றி வருகிறேன். இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக வந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வழியாக திறமையுள்ள பல இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்டுகள் எளிதாக வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வரவேற்பு எவ்வளவு இருக்கிறதோ அதேபோலவே எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். சமூகத்திற்கு எதிர்ப்பாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது அது அவர்களின் தனிப்பட்ட பார்வை. ஒட்டுமொத்த சமூகத்திற்கு தீங்கு என்று எனது பாடல்களை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.