சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26 ஆம் தேதி ஓமலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கணேசன் கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கணேசன், தமிழகத்தில் இதுவரை 67 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமிழக முதல்வர் நடப்பு ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என ஆணையிட்டார். அதன்படி கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற்ற முகாமில் இந்த இலக்கு முடிக்கப்பட்டது என்றார். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர அரசு அழைப்பு விடுவதாகவும் அவர் தெரிவித்தார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், "சேலம் மாவட்ட ஓமலூரில் வரும் 26 ஆம் தேதி 68 வது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுவரை இதுவரை 67 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. வருகிற 26 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 270 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கிறது சுமார் 70 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் நேர்முகத் தேர்வு நடத்த 100 அறைகள் தயாராக உள்ளது தமிழக முதலமைச்சரின் கனவு திட்டமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது இதில் எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ பாலிடெக்னிக் பொறியியல், மருத்துவ செவிலியர்கள், மற்றும் அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு முகாமிற்கு வர உள்ளதால் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்" என்று தெரிவித்தார்.



அதன்பின் சனிக்கிழமையில் நடக்கவுள்ள வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் கல்லூரியில் உள்ள அறைகளை ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் மணி, வேலை வாய்ப்பு மண்டல இயக்குனர் லதா உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.