சேலத்தில் சிலிண்டர் வெடிப்பில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற நிதியிலிருந்து வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் எம்.பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.



சேலம் கருங்கல்பட்டியில் ராஜலட்சுமி என்பவரது வீட்டில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் நான்கு வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 13 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து நடந்த இடத்தை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் பார்வையிட்டு, உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கோர விபத்தில் தீயணைப்பு வீரர் பத்மநாபன் உயிரிழந்தது மிகுந்த சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற நிதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் புதியதாக வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.



மேலும், விபத்து நடந்த இடத்தில் சிலிண்டர் வெடிப்பு குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த தீயணைப்புத் துறை வீரர் பத்மநாபன் உருவப்படத்திற்கு தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் மேலும் பத்மநாபன் மகன் லோகேஷ் மகள் ஜீவிதா மற்றும் அவருடைய தாயாருக்கு ஆறுதல் கூறிவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். 



நேற்று இரவு தீயணைப்பு வீரர் பத்மநாபன் உடல் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 13 பேர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோபி என்பவர் 90% காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளார். 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சிறுமி பூஜாஸ்ரீ நலமுடன் உள்ளார். மற்றவர்களின் உடல் முன்னேறி வருவதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா  5 இலட்சம் மற்றும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 முதல்வரின் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் விபத்து நடந்த இரண்டாம் நாளான இன்று இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். வருகின்ற மக்கள் பத்மநாபன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு சோகத்துடன் திரும்பி செல்கின்றனர்.