சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது பட்டறைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம் வலசையூர் அருகே உள்ள பனங்காடு பகுதியில் வந்தபோது, மற்றொரு கார் மூலமாக வந்த மர்ம கும்பல் காரை துரத்தி உள்ளனர். மேலும் சரவணனின் காரை பின்பக்கமாக இடித்து அவரது காரை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். சரவணனை வெளியே இழுத்து கத்தியால் குத்தியும், தலையை வெட்டியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த காரிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக வீராணம் பகுதியை சேர்ந்த காட்டூர் ஆனந்த் என்ற பிரபல ரவுடி கொலை சம்பவம் தொடர்பாக சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.