சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள மெய்யமலை அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை தனது மனைவி ஏழு மாத கர்ப்பிணி மாதம்மாள், மகள்கள் மனோரஞ்சனி, நித்தீஸ்வரி ஆகிய மூன்று பேரையும் காணவில்லை என ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கடந்த மூன்று நாட்களாக ஏத்தாப்பூர் காவல்துறையினர் காணாமல்போன மூன்று பேரையும் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை அன்று ரவி மற்றும் அவரது மனைவி மாதம்மாள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று மாலை வீடு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டில் இல்லை என புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் மாதம்மாளும், இரண்டு குழந்தைகளும் இறந்து மிதந்தனர். இதனை அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீசார் மூன்று சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மாதம்மாள் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, தற்கொலையா? அல்லது கொலையா? என்றும், குடும்ப தகராறு காரணத்திற்காக தான் தற்கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)