சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கூட்டம் துவங்கியவுடன் மாநகராட்சி கடைகள் மற்றும் வீடுகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் பேசினர். இதை தொடர்ந்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, மேயருக்கு எதிராக பேசத் துவங்கினார். தனது வார்டிற்கு நேற்று ஆய்வு நடத்திய மேயர் ராமச்சந்திரன் தன்னை பற்றி மக்களிடம் அவதூறு ஏற்படுத்துவதாக பேசிக்கொண்டிருந்த போது, திமுக கவுன்சிலர்கள் எழுந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிமுக கவுன்சிலர் எழுந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டமே போராட்டக் களம் போல் மாறியது. இதைத் தொடர்ந்து சேலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகம் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காததை அதிமுக கவுன்சிலர்கள் கடுமையாக கண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி இயல்பு கூட்டத்தை விட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, சேலம் மாநகராட்சி பொதுமக்கள் மீது வரியை திணிக்கிறது. 15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாத வரி தற்போது ஒட்டுமொத்தமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்று கூறினார். இதேபோன்று நேரு கலையரங்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறதாகவும் குற்றம் சாத்தினர். மேலும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சண்முகத்திற்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரவில்லை என்பதனை வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததாக கூறினார்.