சேலம் மாநகர அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சேலம் மத்திய சிறைச்சாலையில் தற்கொலைகளை முன்கூட்டியே தடுக்க, "வாழ்க்கை பாலம்" என்ற பெயரில் சிறையில் மனஇயல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு சிறப்பு திட்டம் கடந்த ஒரு மாதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மத்திய சிறையில் நன்னடத்தை சிறைவாசிகளை கண்டறிந்து அவர்களுக்கு, சிறை மனஇயல் நிபுணர், மன நல ஆலோசகர்கள் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் மூலம் தற்கொலை தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறையில் சிறைவாசிகளின் தற்கொலைகளை தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம், மன பதற்றம் போன்ற மன நோயினால் பாதிக்கப்பட்ட 50 சிறைவாசிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளுக்கு தினந்தோறும் காலை யோகா பயிற்சி, மன நல ஆலோசனைகள் மற்றும் மன நல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சிறைவாசி பழனிச்சாமி என்பவர் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் மனநல சிகிச்சை மேற்கொள்ளும் சிறைவாசிகள் உள்ள ஒன்றாவது தொகுதியில் அனுமதிக்கப்பட்டார். திடீரென தூங்குவதாக சக சிறைவாசிகளிடம் சொல்லிவிட்டு படுத்திருந்த சிறைவாசி பழனிச்சாமி திடீரென அடைப்பு கதவிலேயே, தான் அணிந்திருந்த சட்டையின் உதவியால் தூக்கிட முயற்சி மேற்கொண்டார். இதனை நன்கு கவனித்த இரண்டாம் நிலை காவலர் நவீன் குமார் உடனடியாக சாவியால் அறையை திறப்பதற்குள் சிறைவாசி தற்கொலை முயற்சியை தீவிரபடுத்தினார். இந்த நிலையில் அதே சிறையறையில் இருந்த மூன்று சிறைவாசிகள் காவலருடன் இணைந்து துரிதமாக தற்கொலையை தடுத்தனர்.
மேலும் வாழ்க்கை பாலம் என்ற தற்கொலை தடுப்பு திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றதால் இந்த தற்கொலை தடுத்ததாக அந்த மூன்று சிறைவாசிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மத்திய சிறை கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வினோத் குமார் மூன்று சிறைவாசிகளுக்கும் ஊக்குவிக்கும் விதமாக இனிப்புகளை வழங்கினார். ஆயுள் தண்டனை சிறைவாசி பழனிச்சாமி என்பவரின் தற்கொலையை தடுக்க துரிதமாக செயல்பட்ட விசாரணை சிறைவாசிகள் கோகுல் நாதன், பால முருகன், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மனநோயினால் பாதிக்கப்பட்டு ஆலோசனை மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து வாழ்க்கை பாலம் என்ற சிறை நல தற்கொலை தடுப்பு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)