Book Fair: சேலம் புத்தக கண்காட்சி நிறைவு: 15 நாட்களில் ரூ. 2 கோடி 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

சேலம் புத்தகத் திருவிழாவில் 1,03,436 பள்ளி மாணவ மாணவிகளும், 6,556 கல்லூரி மாணவர்கள், 4,332 ஆசிரியர்கள், 1,22,121 பொதுமக்கள் என 15 தினங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை.

Continues below advertisement

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. இந்த புத்தக கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டது. சுமார் 200 பதிப்பகங்கள் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புத்தக கண்காட்சி கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி துவங்கி கடந்த 3 ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சியினை டிசம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து 15 நாட்கள் நடைபெற்ற சேலம் புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது.

Continues below advertisement

சேலம் புத்தக கண்காட்சிக்கு நாள்தோறும் மக்கள் தரும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வந்தது. அதற்கு ஏற்றார் போல சேலம் மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தினம் தோறும் நடத்தி வந்தார். குறிப்பாக நாள் ஒன்றிற்கு 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சேலம் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சென்றனர். இந்த புத்தகத் திருவிழாவில் 1 லட்சத்து 3,436 பள்ளி மாணவ மாணவிகளும், 6,556 கல்லூரி மாணவ மாணவிகள், 4,332 ஆசிரியர்கள், 1 லட்சத்து 22,121 பொதுமக்கள் என 15 தினங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவை பார்த்து சென்றுள்ளனர். மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் 

1 லட்சத்து 74 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் 2 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் புத்தக ஆர்வலர்கள் சேலத்திற்கு படையெடுத்து வந்தனர். சேலம் புத்தக கண்காட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டைப் போலவே தமிழர்களின் வரலாற்றை குறிக்கும் பொன்னியின் செல்வன், வேள்பாரி, ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு புத்தகங்களுக்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். சேலம் புத்தக கண்காட்சியில் கடந்த 15 நாட்களில் வேள்பாரி மற்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் அதிக பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிக அளவில் சரித்திர நாவல்களை புத்தக வாசிப்பாளர்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த புத்தக கண்காட்சியில் தமிழர்களின் வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணம் போன்ற புத்தகங்கள், வரலாற்று சிறப்புமிக்க நூல்கள், சிறுகதை புத்தகங்கள், சிறுவர்கள் படிக்கக்கூடிய கார்ட்டூன் புத்தகங்கள், ஆங்கில கதை புத்தகங்கள், யோகா மற்றும் மருத்துவ புத்தகங்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.  சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி கலை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும், தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தினம்தோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளை புத்தக கண்காட்சியை பார்வையிட ஏற்பாடுகள் செய்தனர். சேலம் புத்தக கண்காட்சிக்கான ஏற்பாட்டுகளை செய்த அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், புத்தக விற்பனையாளர்கள் என அனைவருக்கும் புத்தகக் கண்காட்சி என்னை எந்தவித சம்பவங்கள் இன்று நடத்திக் கொடுத்ததற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நன்றி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement