சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஜருகுமலை, பச்சமலை, கருமந்துறை, குமரகிரி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதியில் உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள், வனக் குழுவினர், தீயணைப்பு துறை, கோட்டாட்சியர் தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோடை காலத்தில் மலைப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காட்டுத்தீ மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கண்காணிக்கிறோம். ஏற்காடு மற்றும் சுற்றுலா பகுதியில் தனியார் விடுதிகளில் கேம்ப் ஃபயர் நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஏற்காடு மலைப் பாதையில் மது குடிக்க கூடாது. மலைப்பகுதிகளுக்கு செல்வோர் எளிதில் தீப்பிடிக்கும் வண்ணம் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார். கோடை காலங்களில் வன உயிரினங்கள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிறிய தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. எனவே வன உயிரினங்கள் பெரும்பாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.



மேலும், “வனத்துறையினர் மற்றும் வனக்குழுக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எந்தெந்த பகுதியில் தீ ஏற்படும் என்றும் கேட்டறியப்பட்டு அந்த இடங்களில் கூடுதலாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுபோல ஆடு மேய்ப்பவர்கள் காட்டுப் பகுதியில் செல்லும் போது சிகரெட் மற்றும் பீடி குடிக்க கூடாது என்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது என்றார். காட்டுப்பகுதியில் ஏதும் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதுபோல பொதுமக்கள் பழைய பொருட்களை கீழே கொட்டி தீ வைக்க கூடாது. இதன் மூலம் பெரிய தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. காட்டுப் பகுதிகளில் சென்று சுற்றி பார்ப்போர் அங்கு சமைக்க கூடாது . இதனால் தீ விபத்து ஏற்படும். மலைப்பகுதிகளில் செல்வோர் கண்காணிக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தீவிர கண்காணிப்பால் பெரிய தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதுபோன்று இந்த ஆண்டும் கூடுதலாக வனத்துறையினர் மற்றும் வனக் குழுக்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வனப்பகுதிகளில் தடையை மீறி சிகரெட் குடிப்பது, நெருப்பினை உண்டாக்குவது போன்ற காரியங்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று” கூறினார்.