Salem Airport Expansion: சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து மீண்டும் 16 அக்டோபர் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


விமான நிலையம் விரிவாக்க பணி:


சேலம் விமான நிலையம் 165 ஏக்கர் பரப்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது சென்னை, பெங்களூர், கொச்சின், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான போக்குவரத்து நடக்கிறது. இந்த நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 4 கிராமங்களில் இருந்து 575 ஏக்கர் நிலத்தை எடுக்க அளவீடு பணிகள் நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் இந்த பணியில், எடுக்கப்படும் நிலம், நிலத்தில் உள்ள கட்டுமானம், மரங்கள், இதர வகைகளின் எண்ணிக்கை முடிந்துள்ளது. இந்த நிலையில், அந்த நிலத்தில் உள்ள மரங்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. வனத்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், அந்தந்த துறை சம்மந்தப்பட்ட மரங்களுக்கான மதிப்பீடு, அந்த மரத்தால் கிடைக்கும் மதிப்பீடு குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து வருகின்றனர். 


புதிய ஓடு பாதைகள்:


சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 575 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் நிலத்தின் அளவீடு பணிகள் முடிந்துள்ளது. சேலம் காமலாபுரம் விமான நிலையம் தற்போது பகல் நேரங்களில் மட்டுமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்து தரையிறங்குவதற்கான வசதிகளுடன் கூடிய விமான ஓடு பாதை சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி புதிதாக நான்கு விமானங்கள் நிறுத்தும் இடமும். கூடுதல் விமான ஓடு பாதையில் அவைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. 



2026ல் புதிய விமான நிலையம்:


சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகள் 75% முடிந்துள்ளது. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால் 2026 தொடக்கத்தில் பணிகள் நிறைவு பெற்று புது பொலிவுடன் சேலம் விமான நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள பெரு நகரங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடங்கப்படலாம் எனவும், இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சேலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


விவசாயிகள் எதிர்ப்பு:


விமான நிலையம் விரிவாக்க பணியினால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகையில், இங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பொன் விளையும் பூமியாக உள்ளது. அதனால், விவசாய நிலங்களை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். சேலம் விமான நிலையத்தில் டால்மியா அல்லது இரும்பாலை பகுதியில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். டால்மியா பகுதியிலோ, இரும்பாலை பகுதியிலோ விமான நிலையத்தை செயல்படுத்தலாம். இல்லையென்றால் இங்கு கையகப்படுத்தப்படும் நிலா அளவிற்கு ஏற்ப, இரும்பாலையில் உள்ள தரிசு நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அதையே மீறி இங்குள்ள விவசாய நிலத்தை கையகப்படுத்தினால், ஒரு ஏக்கருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.