தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல், கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள், கடந்த 2 ஆம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்னர், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், பெரும்பாலான இடங்களில் போட்டியின்றியும், போட்டி இருந்த இடங்களில் மறைமுக தேர்தல் மூலமாகவும் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், போதுமான உறுப்பினர்கள் வராதது, உறுப்பினர்கள் கடத்தல் புகார், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள் ளிட்ட பல்வேறு காரணங் களால், 60 இடங்களில் மறைமுக தேர்தல் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட 60 பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பேளூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய 4 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும். பேளூர், ஏத்தாப்பூர், காடையாம்பட்டி, கருப்பூர், நங்கவள்ளி, தம்மம்பட்டி மற்றும் வனவாசி ஆகிய 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.



நங்கவள்ளி, காடையாம்பட்டி மற்றும் வனவாசி பேரூராட்சிகளில் பல காரணங்களுக்காக மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. கருப்பூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென விடுமுறையில் சென்றதால் தேர்தல் நடைபெறவில்லை. நங்கவள்ளி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனிடையே நங்கவள்ளி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.


இதில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வனவாசி பேரூராட்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று இன்று வனவாசி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக நகர செயலாளர் ஞானசேகரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



பேளூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் ஜெய செல்வி வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று காடையாம்பட்டி பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குமார் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். பேரூராட்சி மன்றத் தலைவர்களின் தேர்தலுக்குப் பிறகு துணைத் தலைவர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் உடனடியாக வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.