சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள தேவாங்கர் காலனி பகுதியில் சேலம் - அரூர் நெடுஞ்சாலையில் அரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, சேலத்தில் இருந்து அரூர் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பேருந்து மோதியதில் ஈச்சர் லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. 


இதில் இடர்பாடுகளில் சிக்கி தவித்த தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இருளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் வேடியப்பன் என்பவர் அவ்வழியே சென்ற சக வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருடன் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக சேலம் - அரூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வீராணம் காவல் நிலைய போலீசார் விபத்தில் காயமடைந்த நபர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அரூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை அதிவேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த ஈச்சர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையே அதிவேகமாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரும், நடத்துனரும் நிகழ்விடத்திலிருந்து தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரப்பரைப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் நடந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.