தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னேரி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி பைபாஸ் சாலை, குண்டலபட்டி ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்களை ஆசைகாட்டி அதில் இருக்கும் டீசல் திருடப்பட்பட்டு அதில் கெமிக்கல் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் கலப்பட திருட்டு டீசல் விற்பனை குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகளும் காவல் துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஹைவே காவல் துறையினர் காரிமங்கலம், மதிகோண் பாளையம் காவல் துறையினர், திருட்டு டீசல் கும்பலிடம் மாமுல் வாங்கி வருவதால் சட்டவிரோத டீசல் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காமல், அவர்களுடன் கைகோர்த்து கொண்டு திருட்டு டீசல் விற்பனை மையங்களை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து திருட்டு டீசல் விற்பனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்க ஆரம்பித்த நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மாலை பொன்னேரி பகுதியில் திருட்டு டீசல் விற்பனை மையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பெரியசாமி என்வரது கடையில் கலப்பட டீசல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, சுமார் 750 லிட்டர் டீசல், 2 பேரலில் இருந்தது. இதனை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அப்பொழுது வந்த பெரியசாமி குடும்பத்தினர் சோதனையிட சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும் பூட்டை உடைத்து ரூ.3.இலட்சம் பணத்தை எடுத்துவிட்டால் கூறி வாக்குவாதம் செய்தனர். இந்த கலப்பட டீசல் குறித்து தங்களுக்கு தெரியாது, தான் டீ கடை நடத்தி வருவதாகவும், பணத்தை கொடுத்தால் தான் விடுவேன் என வழி மறித்தனர். இதனை அடுத்து பெரியசாமியின் மனைவி, வருவாய் துறை அலுவலர் ஒருவரின் சட்டையை பிடித்து, 3லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு போ என வாக்குவாதம் செய்தார்.
மேலும் வருவாய் துறை வாகனத்தை வழிமறித்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டை இரும்பு கம்பிகள் போன்றவற்றால் தாக்கினர். இதில் துணை தாசில்தார் கோவிந்தராஜ், வி.ஏ.ஓ., முருகன் உட்பட 4 அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும் மூன்று டூவீலர்கள் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காரிமங்கலம் காவல் துறையினர் பாதுகாப்புடன் பேரல் பேரல் ஆக 2 ஆயிரம் லிட்டர் திருட்டு கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் மீது டீசல் திருட்டு கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து, அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.