தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் நடக்கிறது. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்கள் உள்ளிட்டோர் புதிய ஓய்வூதிய திட்டம் பலன் தராது என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். அந்த கோரிக்கையை நடப்பு ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அரசு பணி மற்றும் போக்குவரத்துக் கழக பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வுக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மிக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஓய்வுக்கால பலன்களை அரசு வழங்கிட வேண்டும். 

 



 

மேலும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1000 உதவித்தொகையை அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும். சிறு, குறு தொழில்கள் தமிழகத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தொழில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மூலப்பொருட்கள் விலைவாசி உயர்வால் தொழில் புரிவோர் திணறும் நிலை உள்ளது. எனவே, அரசே மூலப் பொருட்களை விலைக்கு வாங்கி சலுகை விலையில் சிறு, குறு தொழில் புரிவோருக்கு வழங்கிட வேண்டும். 

 

விவசாயிகளுக்கு மத்திய கால கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். சுற்றுச் சூழல் பருவகால மாற்றம் காரணமாக தமிழகத்தில் விவசாய உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உரக் கொள்கை காரணமாக உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு உர மானியத்தை அதிகப்படுத்தி உர விலையை கட்டுப்படுத்தினால் தான் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதற்கு ஏற்ற ஆக்கப்பூர்வ திட்டங்களை தமிழக பட்ஜெட் மூலம் வேளாண் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கோட்பாட்டுக்கு, ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்காது. இது தொடர்பாக எங்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டோம். அதையேற்று தமிழக முதல்வர் ஆக்கபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கிய உள்ளாட்சி இடங்களை கைப்பற்றியவர்கள் அந்த பதவில் இருந்து விலகாவிட்டால் அவர்கள் மீது கட்சி நவடிக்கை எடுக்கும் என முதல்வர் தெரிவித்தார். அதையேற்று சிலர் பதவி விலகினர். சில இடங்களில் இன்னும் பதவி விலகவில்லை. அந்த இடங்கள் அனைத்திலும் மீண்டும் கூட்டணி கட்சியினர் பதவிக்கு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.