நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு 12 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக நேற்று இரவு 10 மணிக்கு திரையரங்குகளில் குவிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 5 திரைகளிலும் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் காவல்துறையின் அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.



இதனிடையே, சேலம் மாவட்டம் சித்தனுர் பகுதியைச் சேர்ந்த குமார் (20) என்ற இளைஞர் தனது 40 நண்பர்களுடன் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த குமார் நண்பர்களுடன் திரையரங்கம் அமைந்துள்ள சாலையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். திரையரங்கில் கதவினை திறந்தவுடன் அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது மது போதையில் அங்கிருந்த கண்ணாடி ஒன்றை தனது கையால் குமார் உடைத்தார். அங்கிருந்து ரசிகர்களின் கூட்ட நெரிசலில் கீழே விழுந்த குமார் காலில் அவர் உடைத்த கண்ணாடியின் ஒரு பகுதி அவரது வலது காலில் ஆழமான காயத்தை உண்டாக்கியது. பின்னர் அங்கிருந்த குமாரின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். காலில் ஆழமான காயம் ஏற்பட்டதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு குமார் சுயநினைவின்றி சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்கள் இடையே தகராறு ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக் கொண்டு, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொதுமக்களுக்கு தொல்லை தரக் கூடாது. சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது. குடிபோதையில் தியேட்டருக்கு வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது. தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்குரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர்மன்ற காட்சிகள் திரையிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும்.


ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முந்தைய காலங்களில் விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்கள் தனித்தனியே வெளியான போது ரசிகர்கள் திரையரங்கம் கண்ணாடி, கதவுகள் போன்றவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தினர். எனவே இந்த முறை காவல்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை ரசிகர் மன்றம் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.