நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகி உள்ளது. நடிகை மஞ்சு வாரியர், நடிகர் சமுத்திரக்கனி போன்ற பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படத்தை தீரன் அதிகாரம் என்னொன்று, வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் செயின் மூவிஸ் வெளியிடுகிறது. இதேபோன்று நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தானா, நடிகர்கள் பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தில் ராஜ் தயாரித்துள்ளார். 


கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்து உள்ளது. 



சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு 12 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் காலை நான்கு மணி சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜய் ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்து நள்ளிரவு பட்டாசுகளை வெடித்து இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடி வருகின்றனர். இந்த இரண்டு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் டிக்கெட் விலையும் அதற்கு ஏற்றார் போல திரையரங்கம் உயர்த்தி உள்ளது. குறிப்பாக நள்ளிரவு வெளியாகும் சிறப்பு காட்சிக்கு ரூ. 400 முதல் ரூ. 2,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 



இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்கள் இடையே தகராறு ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக் கொண்டு, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொது மக்களுக்கு தொல்லை தரக் கூடாது. சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது. குடிபோதையில் தியேட்டருக்கு வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது. தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்குரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர்மன்ற காட்சிகள் திரையிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முந்தைய காலங்களில் விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்கள் தனித்தனியே வெளியான போது ரசிகர்கள் திரையரங்கம் கண்ணாடி, கதவுகள் போன்றவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தினர். எனவே இந்த முறை காவல்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை ரசிகர் மன்றம் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.