திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, இவர் பனங்காட்டுப்படை மக்கள் இயக்கம் என்ற கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் பிலாலுதீன் என்ற தண்டனை கைதி அடைக்கப்பட்டிருந்தார். இலங்கையை சேர்ந்த பிலாலுதீன் என்பவர் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குடல் இறக்கம் பிரச்சினை காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு அறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் பிலாலுதீன் என்பவரை கடத்தி சென்றனர். இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் சிறை தண்டனை கைதியை கடத்திய வழக்கில் ராக்கெட் ராஜா, அருள் உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 



இந்த நிலையில் சேலம் நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றம் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, அருள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றம் சென்று பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாரண்டை புதுப்பித்துக் கொள்ளும்படி உத்தரவிட்டது. அதன்படி இன்றைய தினம் ராக்கெட் ராஜா, அருள் ஆகிய இருவரும் ஆஜராகினர். குறிப்பாக 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு ராக்கெட் ராஜா ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பனங்காட்டு படை மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான நீதிமன்றத்தை சூழ்ந்து நின்றதால் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டிருந்தது.