தமிழர் திருநாள் பொங்கல் என்றாலே தமிழ் பாரம்பரியம் தமிழர் வீரம் குறித்த பல்வேறு போட்டிகள் தை மாதம் முழுவதும் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழரின் வீரத்தின் அடையாளமாக நடத்தப்படும் விளையாட்டாகும். பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு, எருது விடுதல், சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ் மற்றும் பல விளையாட்டுக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதில் தற்போது ஜல்லிக்கட்டு மட்டுமே மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. 



பழமையான விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை தற்போது அழியும் நிலை உள்ள சேவல் சண்டை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருவது போல் சேலம் மாவட்டத்திலும் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. சேலம் மாவட்டட்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெறும் 10 பேர் மட்டுமே சண்டை சேவல்களை வளர்த்து வந்த நிலையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தின் காரணமாக சண்டை சேவல்கள் வளர்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது தற்போது சேலம் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல் வளர்போர் சுமார் 5,000 சண்டை சேவல்களை வளர்த்தும் பராமரித்தும் வருகின்றனர். இந்தவகை சண்டை சேவல்களை நிறத்தை கொண்டு வகை பிரிக்கின்றனர் சாம்பல் நிறத்தில் வரும் சேவல் தும்மர் எனவும், கருப்பு நிறத்தில் உள்ள சேவலை கதர் எனவும், சிகப்பு நிறத்தை உடைய சேவலை யாழ் குத்து எனவும், மஞ்சள் நிறத்தில் உள்ள சேவலை ஜாவா எனவும், வெண்மை நிறத்தில் உள்ள சேவலை சீதா எனவும், பால் வெள்ளையில் உள்ள சேவலை நூறி எனவும், வாய்ப்பகுதியில் முடி உள்ள சேவலை கல்வா என அழைக்கின்றனர்.    



ஒவ்வொரு முறை போட்டிகளுக்கு 20 நாட்கள் முன்பு சேவல்களின் முறையாக பயிற்சியை தொடங்குகின்றனர். முதல் நாள் நீச்சல், இரண்டாம் நாள் மசாஜ், மூன்றாம் நாள் இரவு நேர நடைப்பயிற்சி என பயிற்சி அளிக்கின்றனர். இதற்காக நாளொன்றிற்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். இருப்பினும் மதுரை, தேனி, கம்பம், திருநெல்வேலி, கன்யாகுமரி, சிவகாசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமே தற்போது சேவல் சண்டை நடந்து வருவதாகவும், சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள சேவல் சண்டை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சேலம் சண்டை சேவல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சேவல் சண்டை போட்டிகளை வரும் ஜனவரி 25ஆம் தேதி வரை நடத்த இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.