சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயங்கள் தொடங்கியது.


ஒரு வருவாய் கிராமத்தில், கடந்த வருடத்தில் பெறப்பட்ட வருவாய் இனங்களான நில வரி, தண்ணீர் வரி, கூடுதல் தண்ணீர் வரி, B மெமொ வரி, மீன் வள வாடகை, விற்பனை மற்றும் 2C பட்டா மர வரி மற்றும் இதர கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் இம்மாத இறுதிக்குள் சமர்பிக்க ஜமாபந்தி முறை முன்னுரிமை தரப்படுகிறது.


அதன்படி இன்று சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றார். ஜமாபந்தி முகாமில், பொது மக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்று உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான பிருந்தா தேவியிடம் வழங்கினர்.



அப்போது மனுதாரர் ஒருவர் தங்களது பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, உடனடியாக ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட்டார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு குறித்து தகவல் அளிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  


முதல் நாளில் ஜருகுமலை, பனமரத்துப்பட்டி, அடிமலைப்பட்டி உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவற்றில், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ் கோரி மனு அளித்தவர்களுக்கு உடனடியாக அதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வழங்கினார்.


சேலம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை ஜமாபந்தி முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.