இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. அப்போது, நிலப்பரப்பில் இந்தியாவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் இருந்து வந்தது. சேலம் மாவட்டத்தில் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், விமான நிலையம், அனல் மின் நிலையம், சேகோ உற்பத்தி நிலையம், தாதுக்கள் மற்றும் மால்கோ என அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 11 சட்டமன்றத் தொகுதிகள், 6 நகராட்சி, 32 பேரூராட்சி, 30 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இத்தகைய பெருமைமிக்க சேலம் மாவட்டத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது, மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடியை மையமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுகள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியை தலைமையாகக் கொண்டு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் எடப்பாடி சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் சேலம் மாவட்டத்திற்கு ஏற்படும் நிலை இருந்தது.
குறிப்பாக, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, சேலம் விமான நிலையம், சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி போன்றவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வணிகத்தைப் பொருத்தவரை மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓமலூர் பகுதியில் உள்ள கைத்தறி பட்டு நிறுவனங்கள், சங்ககிரியில் உள்ள லாரி உதிரி பாகங்கள், கரும்பு மற்றும் தக்காளி விவசாயம் என பல வணிகம் சார்ந்தவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் நிலை இருந்தது.
தற்போது, சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர் தனி மாவட்டமாக அறிவித்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஆத்தூர் மாவட்டத்தில் ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, ராசிபுரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓரிரு தொகுதிகள் சேர்க்கப்படும் நிலை உருவாகும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காடு ஆத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் என பல விவசாயத் தொழில்கள் உள்ள மாவட்டமாக ஆத்தூர் மாவட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதில் சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும், ஒரு மாவட்டத்திற்கு தேவையான வாக்காளர்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இல்லை என்பதாலும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக சேலம் சிறந்து விளங்கி வருகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் இரண்டாக பிரிக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட பொது மக்கள் கூறுகின்றனர்.