தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று, தருமபுரி ராமக்காள் ஏரி. இந்த ஏரிக்கு மழை காலங்கள் மட்டும் இன்றி, நகரில் உள்ள கழிவு நீரும் தொடர்ந்து சென்று வருகிறது. இதன் மூலம் இந்த ஏரி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனாலும், ஏரியில் சுமார் 44 ஹெக்டர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள், கடைகள் கடப்பட்டுள்ளதாகவும், வீட்டு மனை பட்டாக்கள் போடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

 

மேலும், ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு படி, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவுறுத்தல் படி, பொதுப்பணித் துறை நீர் வள ஆதார துறை சார்பில், கடந்த  சில மாதங்களுக்கு, இடத்தை காலி செய்ய முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், காலி செய்யாமல், நீதிமன்ற செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.  



 

இதனை தொடர்ந்து இன்று பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர் மோகனபிரியா, தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன் தலைமையில், ராமக்காள் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த வீடுகள், கடைகளை அதிகாரிகள், காவல் துறை பாதுகாப்புடன் அகற்றும் பணி நடைபெற்றது.  இதில் ஜேசிபி இயந்திரங்கள் வைத்து, ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர் காலி செய்ய, அவகாசம் வேண்டும் என முறையிட்டனர்.

 

ஆனால் வணிக நோக்கத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும் குடியிருப்புகளுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ராமாக்காள் ஏரியின் பரப்பளவு அதிகரிக்கவும், நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் பொதுப்பணி துறை, நீர்வள ஆதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராமாக்காள் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால், அந்த பகுதியில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.