சேலத்தில் திமுக பெண் கவுன்சிலர், கோவில் அர்ச்சகரை ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர்தான் என்று கோவில் அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை பார்வையிடச் சென்ற திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அதனை அர்ச்சகர் கண்டித்துள்ளார், அதற்கு பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் அர்ச்சகரை திட்டியதாக கூறப்படுகிறது. 



இதனால் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறதாக கூறி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதில் கடந்த 23 ஆண்டுகளாக சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். தனக்கு 40-வது கோட்டத்தின் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா கோவில் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதாவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ மூலமாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான் காரணம் என்றும் பேசியுள்ளார். இதில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வீடியோ மூலமான கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்கும்போது, திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா அர்ச்சகரை, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசும் காட்சிகள் உள்ளன. அருகில் இருந்த பெண்கள் அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு கூறியும் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளார். எனக்கும், எனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழுகாரணம் திமுக கவுன்சிலர் என்று கோவில் அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






இதுதொடர்பாக 40-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளாவை தொடர்புகொண்டு கேட்டபோது, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கோவில் அர்ச்சகரை கண்டிப்பதாகவும், அர்ச்சகர் வெளியிட்டுள்ள வீடியோவில் உண்மை இல்லை என்று கவுன்சிலர் மஞ்சுளா விளக்கம் அளித்துள்ளார்.