தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று தமிழக உழவர் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கால்வாய் வழியாக வினாடிக்கு 25 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு  வினாடிக்கு 64 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி,கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலான், பாலக்கோட, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள  பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

 



 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக உழவர் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.தருமபுரி மாவட்டம் சின்னாறு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல மழை பெய்துள்ளது. இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயம் செழிக்கும்,நெல் விளைச்சல் அதிகரிக்கும். தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. தற்பொழுது சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கரும்பின் பிழிதிறன் 10.5  என சத்து அதிகமாக இருக்கிறது. கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிக்க தண்ணீரை தேவைப்படுகிறது.

 

அதற்காக ஒகேனக்கல் உபரிநீரை ஏரிகளில் நிரப்புவதற்கான முயற்சி திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் வெற்றிபெறும். அப்பொழுது இந்த மாவட்டம் பசுமையான மாவட்டமாக மாறும்.கடந்த ஆட்சியில் முறைகேடாக நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்து தகுதியுள்ளவர்களுக்கே கடன் தள்ளுபடி செய்யப்படும் என  சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது 5000 கோடி அளவில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 



 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவரை போல, வேறுயாரும் இதுபோன்று  பதுங்கவில்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அவர் பயந்து, பதுங்குவதை பார்த்தால் தவறு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, எம்பி செந்தில்குமார், கூடுதல் ஆட்சியர் ஆர்.வைத்தியநாதன், சார் ஆட்சியர் சித்ராவிஜியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.