புரட்டாசி நடு சனி விரதம் என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனை-காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு.

 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள்,பழங்கள், கீரை வகைகளை பயிரிட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் சேலம், ஓசூர், பெங்களூர், சென்னை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களின் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் சிறிய அளவிலான விவசாயிகள் தங்கள் விளைவிக்கின்ற காய்கறிகள், பழங்கள், கீரைகளை உள்ளூர் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.



 

தருமபுரி நகரப் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில் பாலக்கோடு பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படும் தக்காளி கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகிறது. தருமபுரி உழவர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 25 முதல் 35 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மேலும் பொங்கல் மற்றும் சுப முகூர்த்த நாட்களில் காய்கறிகள் கூடுதலாக விற்பனைக்கு வரும். 

 



 

இந்த நிலையில் தருமபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி நடு சனி விரதம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. கடந்த சில நாட்களைக் காட்டிலும் இன்று காய்கறி வரத்து மற்றும் விலை உயர்ந்தும்  காணப்பட்டது. இன்று கடந்த சில தினங்களாக விற்பனையான விலையை விட, தக்காளி 18, கத்திரிககாய் 26, வெண்டை 24, முள்ளங்கி 10 உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் ஒரு மடங்கு கூடுதலாகவே இருந்தது.  இன்று உழவர் சந்தைக்கு சுமார் 60 டன் அளவிற்கு  வரத்து இருந்தது.



 

இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால், 45 டன் காய்கறிகள், 16 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இன்றைய சந்தையில் கடந்த வாரத்தை விட, 15 டன் காய்கறிகள் கூடுதலாக விற்பனையானது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் 28 இலட்சம் மதிப்பில் 110 டன் காய்கறிகள் விற்பனையானது. தொடர்ந்து அடுத்து வரும் சனிக்கிழமையன்று இதைவிட கூடுதலாக காய்கறிகள் வரத்தும், விலை உயர்ந்து விற்பனையாகும் என தருமபுரி உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவித்தனர்.