சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகளை அடைத்து வைத்து வளர்க்காமல் பொது இடங்களில் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக ஆடு, மாடு, குதிரை, எருமை, பன்றி போன்ற கால்நடைகளை மாநகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மேலும் தெரு ஓரங்களிலும், சாலையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளிலும் சிலர் கட்டிவைக்கின்றனர். இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் நேரிடவும், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்துமாறு பல்வேறு அமைப்பினரிடம் இருந்தும் புகார்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு சென்றன. இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒரு ஆண்டுக்கு முன்பு சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஒரு அறிக்கை அளித்தனர்.
அதன்படி, போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கால்நடைகள் திரிவதால் கால்நடைகளுக்கு காயம், உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகள், பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள், சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டி வைக்கப்படும் கால்நடைகளை பிடித்து மாநகராட்சியின் தொழுவத்தில் அடைத்து வைத்து, கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சாலைகளில் விடப்படும் கால்நடைகளை பிடித்து மாநகராட்சி தொழுவத்தில் அடைத்து வைத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் மீட்கப்படாத பட்சத்தில், உரிமை கோரப்படாத கால்நடைகளை பொது ஏலம் நடத்தி அத்தொகை மாநகராட்சி கணக்கில் சேர்க்கப்படும்.
3 வயதிற்கு உட்பட்ட மாடுகள், எருமை, குதிரை கன்றுகள் நாள் ஒன்றுக்கு ரூ.250ம், 3 வயதிற்கு மேற்பட்ட மாடுகள், எருமை, குதிரை நாள் ஒன்றுக்கு ரூ.500ம், ஆடு ஒன்றுக்கு ரூ.100ம், பன்றி அதன் எடையில் கிலோ ஒன்றுக்கு ரூ.10ம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சியால் பிடித்து வைக்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும், அபராத தொகையுடன் நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் பராமரிப்பு கட்டணத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை சேலம் மாநகராட்சி சார்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
குறிப்பாக சேலம் மாநகரின் முக்கிய இடங்களான கோட்டை மாரியம்மன் கோவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், வள்ளுவர் சிலை, காய்கறி மார்க்கெட் பகுதியில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. அதிலும் மார்க்கெட் பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் அங்கு உள்ள கடைகளில் காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை வாங்கும் உரிமையாளர்கள், மாடுகளை சாலையில் விடுகின்றனர். அந்த மாடுகள் தேவைப்படும்போது இறைச்சி கடைக்காரர்கள் அதனை பிடித்து சென்று விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ’’சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மார்க்கெட்டில் சுற்றித் திரியும் கால்நடைகள் அங்குள்ள காய்கறிகளை சாப்பிட முயற்சிக்கின்றன. அப்போது கடைக்காரர்கள் விரட்டுகின்றனர், உடனடியாக அந்த கால்நடை வாகனங்கள் செல்லும் சாலையில் திடீரென குறுக்கே வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சேலம் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.
*
மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.