தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.  இதில் தருமபுரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல், ரூ.1200ஐ, முழு தொகையாக வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பணியிட மாறுதல் நடத்த வேண்டும். 10 வருடம் முடித்த உதவியாளர்களுக்கு எந்த வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையப் பணிகளை செய்வதற்காக அரசு வழங்கிய செல்போன்கள் முற்றிலும் பழுதான நிலையிலும் காலாவதியான நிலையிலும் இருப்பதால் தரமான புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் அங்கன்வாடி மையப் பணிகளை தவிர பிறத்துறை பணிகளை செய்ய சொல்லி ஊழியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மைய ஊழியர் மற்றும் உதவியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 



 

பூர்வீக நிலத்தை அளந்து தர வலியுறுத்தி விவசாயி குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

 



 

 

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நத்தஹள்ளியை சேர்ந்த பச்சியப்பன், 37.  பச்சியப்பனுக்கும், அவரது சகோதரர் முனிசாமிக்கும், பூர்வீக நிலத்தை அவரது தந்தை முனியப்பன் பிரித்து கொடுத்துள்ளார்.இதற்கு பச்சியப்பன் தனி பட்டா, சிட்டா வழங்க கோரி நிலத்தை சர்வேயர் மூலம் அளக்க முயன்றுள்ளார். இதற்கு பச்சியப்பன் நிலம் அருகே நிலம் வைத்துள்ள காளியப்பன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இருவரின் நிலத்தை அளந்து, தனது நில எல்லையை வரையறுத்து தரும்படி பச்சியப்பன், சர்வேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தள்ளார்.

 

 தொடர்ந்து நிலத்தை அளந்து தர ஆட்சியர் உத்தரவிட்டும், சர்வேயர் நிலத்தை அளந்து தராமல், காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் பச்சியப்பனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர். இதையடுத்து பச்சியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.