தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு யாரேனும் கொடுத்தால் அது குறித்து புகார் செய்ய புகார் எண்கள் அறிவித்து அதனை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தருமபுரி அரசு அவவையார் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.



 

இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள உதவி எண்களை தமிழகத்திலேயே முதல் முறையாக, முன் மாதிரியாக தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ரப்பர் ஸ்டாம்பில் தயார் செய்துள்ளனர். இதனை இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் அனைத்து பாட புத்தகங்களின் முன் பக்கங்களில் பதித்து வருகின்றனர். இதில் குழந்தைகளே உங்களுக்கு பள்ளியிலோ, வெளியிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவுகள் இருந்தால், கல்வி வழிகாட்டி மையம் எண் 14417, குழந்தைகளின் உதவி எண் 1098, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1077 மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

 



 

மேலும் இந்த உதவி மையத்தில் உள்ள புகார் எண்களுக்கு தொடர்பு கொண்டால், புகார் தெரிவிப்பவர்கள் குறித்த முழு விவரம் ரகசியமாக வைக்கப்படும். வெளியில் தெரியப்படுத்தாமல் இருப்பார்கள். எனவே குழந்தைகள் பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கலாம்.  அதேபோல் இந்தப் உதவி மையம் மற்றும் புகார் எண்கள் குறித்து தங்களது கிராமத்திl uள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும்  தமிழகத்திலேயே முதன் முறையாக தருமபுரி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சி, மாணவிகளுக்கு  விழிப்புணர்வு எண்களை புத்தகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த புதிய யுக்தி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகுந்த பயன் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.