பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க ஆர்பிஎப் காவல்துறை கண்காணிப்பை தொடங்கியுள்ளனர். இதற்காக தனியார் ஏஜென்சிகளில் சோதனையிட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15‌ ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊரில் கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். இதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டது. இதனால், சிறப்பு ரயில்களை 12 ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. முக்கிய வழித்தடங்களில் செல்லும் அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பி விட்டதால், கடைசி நேர முயற்சியாக தட்கல் முறையில் டிக்கெட் எடுத்து பயணிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அனைத்து ரயிலும் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இதனை ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில புரோக்கர்கள், முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதிலும், பொங்கலையொட்டிய நாட்களில் இது போன்ற முறைகேடு அதிகளவு நடக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்கும் வகையில் ஆர்பிஎப் காவல்துறை களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ரோந்து சுற்றி வந்து, புரோக்கர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இதுபோக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



இவர்கள் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜென்சிகளில் சோதனையிட்டு வருகின்றனர். ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் டிக்கெட்டை போலி பெயர்களில் பதிவு செய்து, அதிக விலைக்கும் விற்கும் நபர்களை பிடிக்க, வழக்கத்தை விட தொடர்ந்து அதிகளவு தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் நபர்களை கண்காணிக்கின்றனர். அதேபோல், ஒரே நபர் பல பெயர்களில் ஐஆர்சிடிசி ஐடிகளை உருவாக்கி தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறதா? எனவும் சோதனையிட்டு வருகின்றனர். இதுபற்றி ஆர்பிஎப் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிறது 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரயில்களில் பயணிக்க அதிகப்படியானோர் முயற்சிக்கின்றனர். அதனால் அந்த நாட்களுக்கான தட்கல் டிக்கெட் புக்கிங்கில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். தனியார் ஏஜென்சிகள் மற்றும் சில கணினி மையங்களில் அதிக பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக போலி பெயர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் சந்தேக கண்ணோட்டத்துடன் சில மையங்களில் தொடர் சோதனையை மேற்கொண்டுள்ளோம்" என்று கூறினார்.