தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பில் ஒரு வேட்டி, ஒரு சேலை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ₹1,000 ரொக்கத்துடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.



சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1,715 நியாய விலை கடைகள் மூலம் தகுதி உள்ள 10 லட்சத்து 70 ஆயிரத்து 970 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 935 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10 லட்சத்து 71 ஆயிரத்து 905 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.118.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சீரகாபாளையம் பகுதியில் உள்ள  நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் பெற்றிருந்த குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் ₹1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.